Pages

Monday, 7 December 2015

முத்தொள்ளாயிரம் Muttollayiram பாண்டியன்

பாண்டியன்மீது பாடப்பட்ட பாடல்கள்

காப்படங்கென் றன்னை கடிமனை யிற்செறித்து
யாப்படங்க ஓடி அடைத்தபின் மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க்
கென்னைகொல் கைம்மா றினி. – 57

வளையவாய் நீண்டதோள் வாட்கணாய் அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோ – தளையவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கல்என் பாள். – 58

கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள். – 59

களியானைத் தென்னன் இளங்கோவென் றெள்ளிப்
பணியாரே தம்பார் இழக்க – அணியாகங்
கைதொழு தேனும் இழக்கோ நறுமாவின்
கொய்தளிர் அன்ன நிறம். – 60

வழுவில்எம் வீதியுள் மாறன் வருங்கால்
தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான் – இமிழ்திரைக்
கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால்
யார்க்கிடுகோ பூசல் இனி. – 61

தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால் – யானோ
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர்ந்தண்தார் மாறன்
அளியானேல் அன்றென்பார் ஆர். – 62

மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின் – என்னுயிர்க்கே
சீரொழுகு செங்கோற் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு. – 63

புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா
நகுவாரை நாணி மறையா – இகுகரையின்
ஏமான் பிணைபோல நின்றதே கூடலார்
கோமான்பின் சென்றவென் நெஞ்சு. - 64

களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை
அளியான் அளிப்பானே போன்றான் - தெளியாதே
செங்காந்தள் மென்விரலாற் சேக்கை தடவந்தேன்
என்காண்பேன் என் அலால் யான். – 65

கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணூம்
நனவில் எதிர்விழிக்க நாணும் – புனையிழாய்
என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன்
தன்கண் அருள்பெறுமோ தான். – 66

தளையவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி
களையினும்என் கண்திறந்து காட்டேன் – வளைகொடுப்போம்
வன்கண்ணன் வாண்மாறன் மால்யானை தன்னுடன்வந்
தென்கண் புகுந்தான் இரா. – 67

ஓராற்றல் எண்கண் இமைபொருந்த அந்நிலையே
கூரார்வேல் மாறன் என் கைப்பற்ற – வாரா
நனவென் றெழுந்திருந்தேன் நல்வினையொன் றில்லேன்
கனவும் இழந்திருந்த வாறு. – 68

கார்நறு நீலங் கடிக்கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனைவேலி
வண்டிருக்க நக்கதார் வாமான் வழுதியாற்
கொண்டிருக்கப் பெற்ற குணம். – 69

அறிவரார் யாமொருநாட் பெண்டிரே மாகச்
செறிவார் தலைமே னடந்து – மறிதிரை
மாட முரிஞ்சும் மதுரையார் கோமானைக்
கூட வொருநாட் பெற. – 70

கைய தவன்கடலுள் சங்கமால் பூண்டதுவும்
செய்யசங் கீன்ற செழுமுத்தால் மெய்யதுவும்
மன்பொரு வேல்மாறன் வார்பொதியிற் சந்தனமால்
என்பெறா வாடும் என் தோள். – 71

இப்பியீன்று இட்ட எறிகதிர் நித்திலம்
கொற்கையே யல்ல படுவது – கொற்கைக்
குருதிவேல் மாறன் குளிர்சாந் தகலம்
கருதியார் கண்ணும் படும். – 72

கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்
முடிபாடி முத்தாரம் பாடித் – தொடியுலக்கை
கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும்ஓர்
அம்மனைக் காவல் உளேன். – 73

என்னை உரையல் என் பேருரையல் ஊருரையல்
அன்னையும் இன்னள் எனவுரையல் பின்னையுந்
தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென்
கண்படாவாறே யுரை. 74

மாறடுபோர் மன்னர் மதிக்குடையும் செங்கோலும்
கூறிடுவாய் நீயோ குளிர்வாடாய் சோறடுவார்
ஆரத்தால் தீமூட்டும் அம்பொதியிற் கோமாற்கென்
வாரத்தால் தோற்றேன் வளை. 75

துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப்
பிடியேயான் நின்னை யிரப்பல் – கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெஞ்
சாலேகம் சார நட. – 76

எலாஅ மடப்பிடியே யெங்கூடற் கோமான்
புலாஅல் நெடுநல்வேல் மாறன் – உலாஅங்கால்
பைய நடக்கவுந் தேற்றாயால் நின்பெண்மை
ஐயப் படுவ துடைத்து. – 77

போரகத்துப் பாயுமா பாயாது பாயமா
ஊரகத்து மெல்ல நடவாயோ – கூர்வேல்
மதிவெங் களியானை மாறன் தன் மார்பங்
கதவங்கொண் டியாமுந் தொழ. – 78

ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு
ஏடுகோ டாக எழுதுகோ – நீடு
புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி
கனவட்டங் கால்குடைந்த நீறு. – 79

பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல
அணியிழை அஞ்ச வருமால் – மணியானை
மாறன் வழுதி மணவா மருண்மாலைச்
சீறியோர் வாடை சினந்து. – 80

வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல்
ஏரிய ஆயினும் என்செய்யும் –கூரிய
கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங்
கோட்டுமண் கொள்ளா முலை. – 81

நாணாக்காற் பெண்மை நலன் அழியும் முன்னின்று
காணாக்காற் கைவளையுஞ் சோருமால் – காணேன்நான்
வண்டு எவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக்
கண்டுஎவ்வந் தீர்தார் ஆறு. – 82

மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் – கண்டக்காற்
பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோ டுடன்பிறந்த நான். – 83

செய்யார் எனினுந் தமர்செய்வ ரென்னுஞ்சொல்
மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் – கையார்
வரிவளை நின்றன வையையார் கோமான்
புரிவளை போந்தியம்பக் கேட்டு. – 84

உகுவாய் நிலத்த துயர்மணல்மேல் ஏறி
நகுவாய்முத் தீன்றசைதந்த சங்கம் –புகுவான்
திரைவரவு பார்த்திருக்குந் தென்கொற்கைக் கோமான்
உரைவரவு பார்த்திருக்கும் நெஞ்சு. – 85

கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெறுவனேல் கூடு என்று – கூடல்
இழைப்பாள்போற் காட்டி இழையா திருக்கும்
பிழைப்பில் பிழைபாக் கறிந்து. – 86

குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்
புறப்படா பூந்தார் வழுதி – புறப்படின்
ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல்
நாடறி கௌவை தரும். – 87

ஏற்பக் குடைந்தாடில் ஏசுவர் அல்லாக்கால்
மாற்றி யிருந்தாள் ஏனவுரைப்பர் – வேற்கண்ணாய்
கொல்யானை மாறன் குளிர்புனல் வையைநீர்
எல்லாம் எனக்கோர் இடர். – 88

யான் ஊடத் தான் உணர்த்த யான் உணரா விட்டதற்பின்
தான் ஊட யானுணர்த்தத் தான் உணரான் – தேன்ஊற்று
கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம்
எய்தா திராக்கழிந்த வாறு. – 89

புல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார்
நில்லா யிரவே நெடிதென்பர் – நல்ல
விராமலர்த் தார்மாறன் வென்சாந் தகலம்
இராவளிப் பட்ட திது. – 90

பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்
நீர்படுப வெண்சங்கும் நித்திலமும் – சாரல்
மலைபடுப யானை வயமாறன் கூர்வேல்
தலைபடுப தார்வேந்தர் மார்பு.- 91

நந்தின இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும் – சிந்தித்
திகழ்முத்தம் போற்றோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு. – 92

மைந்தரோ டூடி மகளிர் திமிர்ந்திட்ட
குங்கும ஈர்ஞ்சாந்தின சேறுழக்கி – எங்கும்
தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன்
நெடுமாடக் கூடல் அகம். – 93

மடங்கா மயில்ஊர்தி மைந்தனை நாளும்
கடம்பம்பூக் கொண்டேத்தி அற்றால் – தொடங்கமருள்
நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை
இன் தமிழால் யாம்பாடும் பாட்டு. – 94

செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூப்
பைங்கண்வெள் ஏற்றான்பால் கண்டற்றால் – எங்கும்
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப் படும். – 95

கூந்தன்மா கொன்று குடிமாடிக் கோவலானாய்ப்
பூந்தொடியைப் புல்கிய ஞான்றுண்டால் – யாங்கொளித்தாய்
தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார்
மன்னவனே மார்பின் மறு. – 96

கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர்
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் – நண்ணார்தம்
தேர்வேந்தன் தென்னன் திருவுத் திராடநாள்
போர்வேந்தன் பூசல் இலன். – 97

நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார் மாறன்
குடைதோன்ற ஞாலத் தரசர் – திறைகொள்
இறையோ எனவந் திடம்பெறுதல் இன்றி
முறையோ எனநின்றார் மொய்த்து. – 98

நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப்
புரைசை யைநிமிர்ந்து பொங்கா – அரசர்தம்
முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்தமாப்
பொன்னுரையகல் போன்ற குளம்பு. – 99

அருமணி அந்தலை யாடரவம் வானத்து
உருமேற்ரை அஞ்சி ஒளிக்கும் – செருமிகுதோட்
செங்கண்மா மாறன் சினவேற் கனவுமே
அங்கண்மா ஞாலத் தரசு. – 100

நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்
காமர் நெடுங்குடைக் காவலன் ஆணையால்
ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள். – 101

செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன்
உருமின் இடிமுரசு ஆர்ப்ப – அறவுறழ்ந்து
ஆமா உகளும் அணிவரையின் அப்புறம்போய்
வேமால் வயிறெரிய வேந்து. – 102

மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க
வையக மெல்லாம் எமதென் றெழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு. - 103

உருவத்தார்த் தென்னன் ஓங்குஎழில் வேழத்
திருகோடுஞ் செய்தொழில் வேறால் – ஒருகோடு
வேற்றார் அகலம் உழுமே யொருகோடு
மாற்றார் மதில்திறக்கு மால். – 104

தோற்ற மலைகடல் ஓசை புயல்கடாஅங்
காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய்க் – கூற்றுங்
குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே யெங்கோன்
எறிகதிர்வேல் மாறன் களிறு. - 105 

அடுமதில் பாய அழிந்ததன் கோட்டைப்
பிடிமுன் பழகழிதல் நாணி – முடியுடை
மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல்
தென்னவர் கோமான் களிறு. – 106

வெருவரு வெஞ்சமத்து வேலிலங்க வீழ்ந்தார்
புருவ முரிவுகண் டஞ்சி – நரிவெரீஇச்
சேட்கணித்தாய் நின்றிழைக்குஞ் செம்மற்றே தென்னவன்
வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம். – 107

ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன்
தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி – யானையும்
புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தே
பல்யானை அட்ட களத்து. – 108

வாகை வனமாலை சூடி அரசுறையும்
ஓகை உயர்மாடத் துள்ளிருந்து – கூகை
படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன்
விடுமாற்றங் கொள்ளாதார் நாடு. – 109

பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த்
திறைமுறையின் உய்யாதார் தேயம் – முறைமுறையின்
ஆன்போய் அரிவையர் போய் ஆடவர்போய் ஆயிற்றே
ஈன்பேய் உறையும் இடம். – 110

கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான்
மடித்தவாய் சுட்டிய கையாற் – பிடித்தவேற்
கண்ணேரா ஓச்சிக் களிறணையாக் கண்படுத்த
மண்ணேரா மன்னரைக் கண்டு. – 111

தொழில்தேற்றாப் பாலகனை முன்னேறீஇப் பின்னின்
அழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர் – கழலடைந்து
மண்ணீத்த லென்ப வயங்குதார் மாமறன்
கண்ணீத்தந் தீர்க்கு மருந்து. – 112

சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும்
நின்றதுகொல் நேர்மருங்கில் கையூன்றி – முன்றில்
முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்(கு)
உழந்துபின் சென்றவென் நெஞ்சு. 113

உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேய
கழுதை செவிஅரிந்து அற்றால் – வழுதியைக்
கண்டநம் கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு. 114

நறுவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியான் அல்லன் – துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா டைந்தின்
குலங்காவல் கொண்டொழுகும் கோ.   - 115


No comments:

Post a Comment