சோழன்மீது பாடப்பட்ட பாடல்கள்
திறந்திடுமின் தீயவை பிற்காண்டு மாதர்
இறந்து படிற்பெரிதாம் ஏதம் – உறந்தையர்கோன்
தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு . -27
குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை
வதுவை யெருகென்றால் அன்னை – அதுபோய்
விளைந்தவா இன்று வியன்கானல் வெண்தேர்த்
துலங்குநீர் மாமருட்டி அற்று. – 28
சுடரிலைவேற் சோழன்தன் பாடலம் ஏறிப்
படர்தந்தான் பைந்தொடியார் காணத் – தொடர்புடைய
நீர்வலை யிற்கயல் போற்பிற ழும்மேதன்
சாலேக வாயில்தொறுங் கண். – 29
அன்னையும் கோல்கொண் டலைக்கும் அயலாரும்
என்னை அழியுஞ்சொற் சொல்லுவர் –நுண்ணிலைய
தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண்தேர் வளவன் திறத்து. – 30
அலங்குதார்ச் செம்பியன் ஆயெழில்தோள் நோக்கி
விலங்கியான் வேண்டா வெனினும் – நலந்தொலைந்து
பீர்மைற் கொளல்உற்ற பேதையர்க் கென்வாய்ச்சொல்
நீர்மே லெழுந்த நெருப்பு. – 31
நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற – யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு. – 32
ஊடல் எனஒன்று தோன்றி அலருறூஉங்
கூடல் இழந்தேன் கொடியன்னாய் – நீடெங்கின்
பாளைமிற் தேன் தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக்
காளையைக் கண்படையுட் பெற்று. -33
புலவி புறக்கொடுப்பன் புல்லியினா ணிற்பன்
கலவி களிமயங்கிக் காணேன் – நிலவியசீர்
மண்ணாளுஞ் செங்கோல் வளவனை யானிதன்றோ
கண்ணாரக் கண்டறியா வாறு. -34
கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த
நனவினுள் முன்விலக்கு நாணும் – இனவங்கம்
பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார்
செங்கோல் வடுப்படுப்பச் சென்று. – 35
கண்டன உண்கண் கலந்தன நல்நெஞ்சம்
தண்டப் படுவ தடமென்தோள் – கண்டாய்
உலாஅ மறுகில் உறையூர் வளவற்
கெலாஅ முறைகிடந்த வாறு. – 36
என்னெஞ்சு நாணு நலனும் இவையெல்லாம்
மன்னன் புன்னாடன் வௌவினான் – என்னே
அரவகல் அல்குலாய் ஆறில் ஒன் றன்றோ
புரவலர் கொள்ளும் பொருள். – 37
தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி யிளவளவன்
மண்ணகங் காவலனே யென்பரால் - மண்ணகங்
காவலனே யானக்காற் காவானோ மாலைவாய்க்
கோவலர்வாய் வைத்த குழல். – 38
அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி
முறைசெயும் என்பரால் தோழி – இறையிறந்த
அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன்
செங்கோன்மை செந்நின்ற வாறு. – 39
நீள்நீலத் தார்வளவன் நின்மேலான் ஆகவும்
நாணிமை யின்றி நடத்தியால் – நீள்நிலம்
கண்தன்மை கொண்டலரும் காவிரி நீர்நாட்டுப்
பெண்தன்மை இல்லை பிடி. – 40
செங்கால் மடநாராய் தென்னுறந்தை சேறியேல்
நின்கால்மேல் வைப்பன்என் கையிரண்டும் – நன்பால்
கரைஉறிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்
குரையாயோ யானுற்ற நோய். – 41
வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே
மரக்கண்ணோ மண்ஆள்வார் கண்ணென் – றிரக்கண்டாய்
வாள்உழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென்
தோள்அழுவம் தோன்றத் தொழுது. – 42
பேயோ பெருந்தண் பனிவாடாய் பெண்பிறந்தா
ரேயோ உனக்கிங் கிறைக்குடிகள் –நீயோ
களிபடுமால் யானைக் கடுமான்தேர்க் கிள்ளி
அளியிடை அற்றம்பார்ப் பாய். – 43
நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத்
தாமரையும் நீலமுந் தைவந் – தியாமத்து
வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய்
பண்டன்று பட்டினங் காப்பு. – 44
தானைகொண் டோடுவ தாயதன் செங்கோன்மை
சேனை யறியக் கிளவேனோ – யானை
பிடிவீசும் வண்தடக்கைப் பெய்தண்தார்க் கிள்ளி
நெடுவீதி நேர்பட்ட போது. – 45
காவல் உழவர் களத்தகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை – காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு. – 46
மாலை விலைபகர்வார் கிள்ளிக் களைந்தபூச்
சால மருவியதோர் தன்மைத்தால் – காலையே
வில்பயில் வானகம் போலுமே வெல்வளவன்
பொற்பார் உறந்தை அகம். – 47
மந்தரங்க் காம்பா மணிவீசும் போலையாத்
திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும்
முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை. 48
அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்
மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் – எந்தை
இலங்கிலைவேற் கிள்ளி இரேவதிநாள் என்னொ
சிலம்பிதன் கூடிழந்த வாறு. – 49
நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முன்றந்த மன்னர் முடிதாக்க – இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ. – 50
கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு. – 51
கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி களிறு. – 52
பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர
நாற்றிசையும் ஓடி நரிகதிப்ப – ஆற்ற
அலங்கலம் பேய்மகளிர் ஆட வருமே
இலங்கிலைவேற் கிள்ளி களிறு. – 53
முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத்
தடித்த குடர்திரியா மட்டி – எடுத்தெடுத்துப்
பேஎய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன்
சேஎய் பொருத களம். - 54
இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற
வரியிளஞ் செங்காற் குழவி – அரையிரவில்
ஊமந்தா ராட்ட உறங்கிற்றே செம்பியன் தன்
நாமம்பா ராட்டாதார் நாடு. – 55
அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டால் – பனிக்கடலுள்
பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான்
காய்சினவேல் கிள்ளி களிறு. 56

No comments:
Post a Comment