சேரன்மீது பாடப்பட்ட பாடல்கள்
தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையை
கண்டுலாஅம் வீதிக் கதவு – 2
வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேல் கண்டவர்
மாமையை அன்றோ இழப்பது – மாமையிற்
பன்னூறு கோடி பழுதோ,என் மேனியிற்
பொன்னூறி யன்ன பசப்பு - 3
கடற்றானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை – அடைக்குமேல்
ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான் - 4
வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேல்,மாந்தைக் கோவே – நிரைவளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர்தாய்மார்
செங்கோலன் அல்லன் என. – 5
பன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரும் நன்னாடன் – என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு? – 6
கடும்பனித் திங்கள்தன் கைப்போர்வை யாக
நெடுங்கடை நின்றதுகொல் தோழி – நெடுஞ்சினவேல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்றவென் நெஞ்சு. – 7
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் –
போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு. – 8
வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்(று)
அருகலர் எல்லாம் அறிய – வருகலாம்
உண்டா யிருக்கஅங்(கு) ஒண்தொடியாள் மற்(று)அவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம் – 9
இவன்என் நலங்கவர்ந்த கள்வன் இவன்எனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று – அஞ்சொலாய்
செல்லு நெறியெலாஞ் சேரலர்கோக் கோதைக்கச்
சொல்லும் பழியோ பெரிது. – 10
காராட் டுதிரம்தூய் அன்னை களன்இழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ! – போராட்டு
வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதைக்கென்
நெஞ்சங் களங்கொண்ட நோய். – 11
மல்லல்நீர் மாந்தையார் மாக்கடுங்கோக் காயினும்
சொல்லவே வேண்டும் நம்குறை – நல்ல
திலகங் கிடந்த திருநுதலாய் அஃதால்
உலகங் கிடந்த இயல்பு. – 12
நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய
ஊரிரே என்னை உயக்கொண்மின் – போரிற்
புகலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்
கழலுமென் நெஞ்சங் கிடந்து. – 13
அள்ளற் பழனத் தரக்காம்பல் வாய் அவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் – புள்ளினம்தங்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு. -14
களிகள் களிகட்கு நீட்டத்தங் கையாற்
களிகள் விதிர்த்திட்ட வெங்கட் – துளிகலந்து
ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே
பும்புனல் வஞ்சி அகம். – 15
வானிற்கு வையகம் போன்றது வானத்து
மீனிற் கனையார் மறமன்னர் – வானத்து
மீன்சேர் மதியனையன் விண்ணுயர் கொல்லியர்
கோன்சேரன் கோதையென் பான். – 16
பல்யானை மன்னர் படுதிறை தந்துயம்மின்
மல்லல் நெடுமதில் வாங்குவிற் – பூட்டுமின்
வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வர் விசும்பு. – 17
அரும்பவிழ்தார்க் கோதை அரசெறிந்த வெள்வேல்
பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச் – சுரும்பொடு
வண்டாடு பக்கமு முண்டு குறுநரி
கொண்டாடு பக்கமும் உண்டு. – 18
வீறுசால் மன்னர் விரிதாம வெண்கொடையைப்
பாற எறிந்த பரிசயத்தால் – தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை. – 19
அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயிற்கதவம் கோத்தெடுத்த கோட்டாற் – பனிக்கடலுட்
பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே யெங்கோமான்
காய்சினவேற் கோதை களிறு. – 20
மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா
வயிரக் கடக்கை வாங்கித் – துயருழந்து
புண்ணுற் றழைக்கும் குறுநரித்தை பூழியனை
கண்ணுற்று வீழ்ந்தார் களம். – 21
கரிபரந்து எங்கும் கடுமுள்ளி பம்பி
நரிபரந்து நாற்றிசையும் கூடி – எரிபரந்த
பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச்
செங்கண் சிவப்பித்தார் நாடு. – 22
வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளைபூத்து
ஊரறி யலாகா கிடந்தனவே – போரின்
முகையவிழ்ந்தார்க் கோதை முசிறியார் கோமான்
நகையிலைவேல் காய்த்தினார் நாடு. – 23
இந்திரன் என்னின் இரண்டேகண் ஏறூர்ந்த
அந்தரத்தான் என்னின் பிறையில்லை – அந்தரத்துக்
கோழியான் என்னின் முகன்ஒன்றே கோதையை
ஆழியான் என்றணரற் பாற்று. - 24
புன்னாகச் சோலை புகழ்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரும் நன்நாடன் – என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவர்அறிந்த ஆறு. - 25
இருங்களி றீன்ற மடப்பிடி சாரல்
இரங்கருவி நீராற் றெளிமின் - நலங்கிளர்வேற்
றுன்னரும் போர்க்கோதை துடாச்செருக்கின் (முன்னின்ற)
மன்னன் மதிலாய வென்று. - 26

No comments:
Post a Comment