திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக்
கவிராயர். இவருக்கும் காளமேகப் புலவருக்கும் போட்டி. அப்போது அதிமதுரக் கவிராயர் பாடினார்.
பாடல்
மூச்சுவிடுமுன்னே முந்நூறு நானூறும்
ஆச்சுதென்றா லாயிரம்பாட் டாகாதா – பேச்சென்று
வெள்ளக்கவி காளமேகமே நின்னுடைய
கள்ளக்கவிக் கடையைக் கட்டு .(159)
மூச்சு விடும் முன்னே முந்நூறும் நானூறும் ஆச்சுது என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதா
பேச்சென்று வெள்ளக்கவி காளமேகமே நின்னுடைய கள்ளக்கவிக் கடையைக் கட்டு
ஒருமுறை மூச்சு விட்டு
முடிப்பதற்கு முன்பே 300, 400 என்று பாடல்களைப் பாடிவிடுவேன். சரி பாடியாயிற்று
என்று நீ சொல்லும்போது 1000 பாடல்கள் பாடப்பட்டிருக்கும். வெள்ளம் போன்று கவி
பாடும் காளமேகமே! நீ கள்ளத்தனமாக கவிக்கடை போட்டிருக்கிறாய். அந்தக் கவிக்கடையை
சுருட்டிக் கட்டி எடுத்துக்கொண்டு சென்றுவிடு.
உடனே காளமேகம் தன்
கவித்திறம் அதனினும் மேலானது என்று ஒரு பாடலைப் பாடிக் காட்டினார். அந்தப் பாடல் இது.
பாடல்
இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ –சும்மா
இருந்தாலிருந்தே னெழுந்தேனே யாயின்
பெருங்காள மேகம் பிளாய் . (59)
இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் அம் என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ
சும்மா இருந்தால் இருந்தேன் எழுந்தேனே ஆயின் பெரும் காளமேகம் பிளாய்
இம் என்று சொல்வதற்குள் 700, 800 என்று என்
பாடல் இருக்கும். அம் என்று ஆம் என்பதைச் சுருக்கி நீ ஒலித்தாலும் அப்போது 1000
பாடலாக அது முடிக்கப்பட்டிருக்கும். சும்மா இருந்தால் இருப்பேன். எழுந்தேனே
ஆமாயின் நான் கவிமழை பொழியும் காளமேகம் (கருமேகம்) பிள்ளாய்! (பிள்ளைக் கவியே)
No comments:
Post a Comment